சமயம் வளர, மொழி வாழ, உலகில் நீதி வழுவாதிருக்க, மக்கள் இன்புற்று இருக்க பிரார்த்திப்பதே மத்திய கைலாஷ் ஆலயத்தின் மகத்தான கடமையாகும்.
ஆன்மா லயிக்கும் இடம் ’ஆலயம்’ ஆகும். எனவேதான் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஔவையார். “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”, என்பதும் ஆன்றோர் வாக்கு. இறையருள் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும், ஆலயத்தில் பாலில் படுநெய்போல் மறைய நின்ரறுளான் மாமணிச்சோதியன். இச்சக்தியை உணர்த்து பேரின்பத்தை பெறும் நோக்குடனேயே தினந்தோறும் ஆலய தரிசனம் செய்கிறோம். ஆலய தரிசனத்தின் மூலம் மனிதன் புனிதன் ஆகிறான். மனிதன் புனிதன் ஆகும் பொழுது, ஜீவாத்மா பரமாத்மா சங்கமம் ஏற்படுகிறது. அதுவே இப்பிறவியின் பெருநோக்காகும்.
இப்பேரின்பப் பேற்றினை பெறுவதற்காகவே எமது பண்டைய மன்னர்கள் பற்பல ஆலயங்களை அமைத்தார்கள். அவற்றின் மூலமாக, பக்தியையும் பண்பாட்டினையும், கலாச்சாரத்தினையும், மக்களிடையே ஒற்றுமையையும் வளர்த்தார்கள். நம் தாய் நாடானது ஆலயங்கள் பல அமைந்ததனால் பக்தி பெருகிய இடமாகியது. இக்காரணத்தினால் அவ்விடம் ‘திருவிடம்‘ எனவும், அங்கே வாழ்ந்த மக்கள் திருவிடர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
காலப் போக்கில் திருவிடர்கள் பல இடர்களினால் பற்பல இடங்களுக்கு குடியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. பல நாடுகளை நோக்கி சென்றார்கள். அவற்றுள் ஒன்றுதான் எம் அழகிய தென் ஆப்பிரிக்கநாடு. எம் மூதாதையர்கள் அன்னியரால் கூலித் தொழிலாளர்களாக இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்கள். தெய்வ வழிபாடு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் மிகமுக்கிய அங்கமாகும்.
இந்நோக்கம் நிறைவேற கட்டப்பட்ட ஆலயங்களுள் “ மிட்ராண்ட் மத்திய கைலாச ஆலயமும் “ ஒன்றாகும். பிரிட்டோரியா, ஜோஹனஸ்பேர்க் என்பன தென் ஆப்பிரிக்காவின் இரு பெரு நகரங்களாகும். இவற்றின் மத்தியில் “மிட்ராண்ட்” நகரம் அமைந் திருப்பதாலும், கைலாசநாதர் ஆலயம் இவ்விடத்தில் கட்டப்பட்டிருப்பதாலும் “மத்திய கைலாஷ்“ என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.
“ஒன்று கூடிவழிபடுவோர் ஒற்றுமையாக வாழ்வர்” என்ற ஆங்கிலப் பழமொழிக் கேற்ப இவ்வாலயத்திற்கு வருகை தந்து வணங்குபவர்கள் எல்லோரும் கூடி வாழ்கிறார்கள். எம் தாய் நாட்டு மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை வளர்ப்பதற்கு மத்திய கைலாஷ் ஆலயம் மக்களுக்கு தொண்டு செய்து வருகிறது.
பிரம்ம ஸ்ரீ குரு நடராஜசர்மாவின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், மக்களின் ஆதரவோடு வளர்ச்சி அடைந்து வருகிறது. பக்தர்கள் மனத்திருப்தியுடன் வந்து வழிபடும் ஸ்தலமாக விளங்குகிறது. “மக்கள் சேவையே மகேசன் சேவை”, என்பதற்கிணங்க பற்பல சேவைகளை இவ்வாலயம் சமுதாயத்திற்கு வழங்குகிறது.